Sunday, August 22, 2010

IAS - இந்திய அடிமை சர்வீஸ்?

உமா சங்கர், IAS (நேர்மையின் சின்னம்)
சென்ற புதன்கிழமை அன்றே இடப் பட வேண்டிய பதிவு இது: சில காரணங்களால் கொஞ்சம் தாமதமாக வெளியிடுகிறேன்.

பொதுவாகவே, நம்முடைய திரைப்படங்களின் மூலம் நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், ஆள்பவர்களின் எண்ணங்களுக்கேற்ப ஒரு அதிகாரி நடந்து கொண்டால் அவர் பந்தாடப் படுவதும், குண்டர்களால் தாக்கப் படுவதும்தான். ஆனால், ஒரு வித்தியாசம் என்னவென்றால், சினிமா க்ளைமாக்ஸில்  அதிகாரி மக்களால் போற்றப் பட்டு, குற்றவாளிகள் மாட்டிக் கொள்வார்கள். ஆனால், நிதரிசனம் வேறு மாதிரி இருக்கிறது.

சற்றேறக் குறைய பதின்மூன்று ஆண்டுக்கு முன்னால் ஒரு நேர்மையான அதிகாரியாகத் தெரிந்த உமா சங்கர், இன்று சஸ்பெண்டு செய்யப் பட்ட அதிகாரியாக இந்த அரசுக்கு தெரிகிறார் என்றால், அவர் செய்த தவறுதான் என்ன? ஒரு வேளை, அவர் தவறான சர்டிபிகேட் கொடுத்து வேலைக்கு சேர்ந்தார் என்றால், அதை கண்டுபிடிக்க இவ்வளவு வருடங்கள் ஆயிற்றா? அப்படி என்றால், ஒரு குற்றம் நிகழ்ந்து பல வருடங்கள் கழித்துதான் தெரிய வரும் என்றால் அது ஒரு உண்மையான நீதி நேர்மை நிறைந்த அரசாக எப்படி இயங்கும்.

தினகரன் அலுவலக எரிப்பில் மூன்று பேர் உயிரோடு கருகினார்களே, யார் காரணம் என்று யாருக்கும் தெரியாதா? தா. கிருட்டிணன் கொலையுண்டபோது "அரசியலில் இதெல்லாம் சாதாரணம்" என்று திருவாய் மலர்ந்தாரே, இன்றைய முதல்வர், அவருக்கு உண்மையான குற்றவாளிகளை தெரியாதா? இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் விட்ட (அல்லது விடச் சொல்லி கட்டாயப் படுத்தப்பட்ட) அதிகாரிகள் மீது இதே போல் நடவடிக்கை எடுப்பார்களோ?

"நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது சாக்கு" என்று உண்மையான அதிகாரிக்கு சோதனை தருவது ஒரு அரசுக்கு அழகல்ல. ஆனால், ஒன்று. இந்த அரசில் நேர்மை இருக்கும், நியாயம் கிடைக்கும் என்று யாராவது நம்பினால் அவர் கீழ்ப்பாக்கத்தில் சேர்க்கப் படவேண்டிய ஆள் என்பதுதான் நிதரிசனம்.

அதிகாரிகளுக்கும் ஒன்று புரிய வேண்டும். நீங்கள் செய்யும் எந்த செயலுக்கும் அது அரசுக்கு ஆதரவாக அமைந்தால் அது அரசின் சாதனை. அதுவே அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி கொடுத்தால், அது அதிகாரியின் கவனக் குறைவு, அந்த அதிகாரி தண்டிக்கப் படவேண்டியவர்.  இன்று ஒரு உமா சங்கர் தண்டிக்கப் படுகிறார்; இதைக் கண்டு கொள்ளாமல் விட்டால், நாளை நூறு உமா சங்கர்களுக்கு (நூறு நேர்மையான அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பதும் சந்தேகம்தான்!) இதே கதி ஏற்படும்.

கொதித்தெழுவோம், நம்மால் முடிந்தவரை உமா சங்கருக்கு ஆதரவாக எழுதுவோம்! இதை மக்களிடம் எடுத்து சென்று உண்மையான அரசாங்க ஊழியருக்கு கை கொடுப்போம்!



No comments: