Monday, October 17, 2011

தமிழ்மணம்-உண்மைய சொன்னா கசக்கிறதா?

தமிழ்மணம் என்றொரு திரட்டி இருப்பது எல்லாருக்கும் தெரிந்ததே. ஆனால் அதில் ஒரு புல்லுருவி இருப்பது இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது. 

பன்னிகுட்டி என்றொரு பதிவர் இவரு ஒரு பய(ங்கர)டேட்டா போட்டாரு. அது சந்தேகமில்லாமல் நகைசுவையாதான் இருந்தது. ஆனாலும் ஒருத்தருக்கு மட்டும் அதில இருந்த ஒன்னு குத்தியிருக்குது. என்ன செய்ய, ஒரு வேளை உண்மைய சொன்னதால மனசாட்சி உருதிடுச்சு, போல!
நாட்டில ஆயிரக்கணக்கான பதிவர்கள் இருக்காங்க. அவங்க போடற எல்லா பதிவுகளும் நமக்கு புடிச்ச மாதிரிதான் இருக்கணும்னு இல்ல. உங்களுக்கு பிடிக்காத பதிவா இருந்துச்சுன்னா என்ன செய்யணும்? ஒன்னு, அதைப் பத்தி கவலைப் படாம நீங்க பாட்டுக்கு போகணும், இல்லை அங்க போயி உங்க கருத்தை எழுதிட்டு வரணும், அதுவும் இல்லைனா நீங்க ஒரு எதிர் பதிவு எழுதிட்டு போய்கிட்டே இருக்கணும். இந்த பெயரிலின்னு ஒருத்தர் என்ன பண்றாருன்னா, பன்னிகுட்டி பதிவுல போயி ஒரு கமென்ட் போட்டாரு. தன்னோட பேரை எப்படி போட்டாரு, தெரியுமா? 
On behalf of tamilmanam
-/tramanitharan, k.

(-/பெயரிலி.)

இப்படி ஒரு பேர்ல வந்து கமென்ட் போட்டா என்ன பொருள்? இந்த கமெண்ட்டுக்கு தமிழ்மணம் பொறுப்பாகுமா இல்லையா? இவரு எப்படி எல்லாம் கமென்ட் போட்டாரு தெரியுமா? அது இந்த பதிவுல போட்டு என் பதிவை நாறடிக்க விரும்பலை. ஆனா,ஒன்னு, நல்ல மனசு உள்ளவங்க அந்த மாதிரி கமென்ட் போட மாட்டாங்க. ஆனாலும் கும்மி க்ரூப்ல இருந்தவங்க நாகரிகமாதான் பதில் சொன்னாங்க. 

இதோட இருந்தா பரவாயில்லை,அந்த பதிவுல யாருலாம் தமிழ்மணத்தை எதிர்த்து எழுதினாங்களோ, அவங்களை எல்லாம் தமிழ்மணம் திரட்டியிலிருந்து தூக்கி எரிஞ்சதா மெயில் அனுப்பினாங்க. சில தன்மானமுள்ள பதிவர்கள் தாங்களாவே அந்தத் திரட்டில இருந்து வெளியேறினாங்க.  

இந்த நேரத்துல களத்துல குதிச்சாரு, ஒரு சொம்பு தூக்கி. அவரு என்ன பண்ணினாரு, "யப்பா எல்லாரும் வாங்க, உக்காந்து பேசி ஒரு முடிவு எடுக்கலாம்"னு ஒரு பதிவு போட்டாரு. அங்க கூட கும்மி க்ரூப் ஆளுங்க டீசெண்டா கமென்ட் போட்டு தங்கள் கருத்தை தெரிவிச்சாங்க. அதுக்கப்புறம் சொம்பு தூக்கி ஒரு பதிவு போட்டாரு, பாருங்க, த்தூ...........கேவலம். இவரு மத்தவங்களை பார்த்து இதான் வீரமான்னு கேக்கறாரு.  வாங்க பேசலாம்னு ரெண்டு க்ரூப்பைக் கூப்பிட்டு அப்புறமா ஒருதலை பட்சமா பதிவு எழுதறாரே, இவரு வீரத்தைப் பத்தி பேசலாமா?

ஒரு உண்மை தமிழ்மணம் ஆளுங்களுக்கு புரியலை போலிருக்கு, "பதிவர்களை நம்பித் தான் திரட்டியே தவிர, திரட்டியை நம்பி பதிவர்கள் இல்லை"

சூடு சொரணை மானம் உள்ளவன் தமிழ்மணம் பக்கம் போக மாட்டான்.
எனக்கு இது எல்லாமே இருக்கு.

ஸோ, பை, பை, தமிழ்மணம்! 

Sunday, August 28, 2011

செங்கொடி செய்தது தியாகமா?

ச்சே, இந்த சமுகத்தை நினைத்தாலே கேவலமாக உள்ளது. அன்று தூத்துக்குடியில் முத்துகுமார் தீக்குளித்தார் என்றால் அதில் ஒரு காரணம் உள்ளது, அது ஏற்கக் கூடியது. தமிழ் இனத்தில் பிறந்த அவர் தன இனமே அழியக் கூடிய நிலையில் உள்ளதே என்ற கவலையில் உயிர் துறந்தார்.

ஆனால், இன்று காஞ்சிபுரத்தில் செங்கொடி என்ற ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டது சரியான காரணத்திற்குத் தானா?

ஒரு தேசத் தலைவரை, ஒரு இளம் பிரதமரை கொள்வதற்கு ஒரு கூட்டமே திட்டம் தீட்டுமாம், அந்தக் கூட்டத்தின் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒரு சில சமூக விரோதிகள் கூடி உதவி செய்வார்களாம், ஆனால் அந்தப் பாவிகளை சட்டத்திற்குமுன் கொண்டுவந்து அவர்களுக்கு தண்டனை மட்டும் கொடுக்கக் கூடாதாம். இந்த வாதம் சரி என்றால், அஜ்மல் கசாப் என்ற அயோக்கியனுக்குக் கூட மரண தண்டனை கொடுக்கக் கூடாதே!

நான் மத்திய அரசையோ காங்கிரஸ் கட்சியையோ ஆதரித்து இதை எழுதவில்லை.  எது எப்படியென்றாலும் ஒரு சதித் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு யார் உதவி செய்தாலும் சட்டத்தின் முன் அவர் தண்டிக்கப் பட வேண்டியவரே! இதில் தமிழ், தமிழினம் புண்ணாக்கு எல்லாம் தேவையே இல்லை.

என்னைப் பொறுத்தவரை செங்கொடி செய்தது தியாகம் இல்லை, அவரை வளர்த்த இந்த நாட்டுக்கு அவர் செய்த துரோகம் தான் இந்த தீக்குளிப்பு. இந்த லட்சணத்தில் அவரை மாவீரன் முத்துகுமாருடன் ஒப்பிட்டு அந்த உண்மையான தமிழின உணர்வாளரை கொச்சைப் படுத்த வேண்டாம்.

Tuesday, August 16, 2011

உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு தக்காளி சட்டினியா?

ஆரம்பிச்சுட்டாங்கப்பா, இந்த மனித உரிமை மக்களும், தமிழ் தேசியத் தலைவர்களும்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில ஈடுபட்ட மூணு பேரு தூக்கு தண்டனை உறுதி செஞ்சது தப்பாம். 

நான் கேக்கறேன், ராஜீவை விட்டு தள்ளுங்க, அவர் நல்லவரா, கெட்டவரா, தமிழர்களுக்கு நல்லது பண்ணினாரானு எனக்குத் தெரிய வேண்டாம். ஆனா அவர் கூடவே இருந்த காவல் துறை அதிகாரிகளும் சில பொது மக்களும் செத்துப் போனாங்களே, அவங்க சாவுக்கு காரணமா இருந்தவங்க தண்டிக்கப் பட வேண்டுமா, வேண்டாமா?

தமிழ் தமிழ்னு பேசறீங்களே, இந்திராவைக் கொன்ற சீக்கியர்கள் இருக்கும் பஞ்சாப் போனபோதும் சரி, நக்சல் விளை நிலமா இருக்கும் வடகிழக்கு பகுதிக்கு போனபோதும் சரி, ராஜீவ் சாகலை, ஆனா அமைதிக்கு பேர் போன தமிழகத்துக்கு வந்தபோது கொல்லப்பட்டு தமிழ்நாட்டுக்கே கெட்ட பேர் வாங்கிக் கொடுத்த "போராளிகளுக்கு" விடுதலை வேணும்னு கேக்கறது உங்களுக்கே வெக்கமா இல்ல?

என்னைக் கேட்டா, நளினியை மன்னிச்சதே தப்பு. அவங்களை மன்னிக்கலாம்னு சோனியா மட்டும் சொன்னா போதுமா? கொல்லப்பட்ட மத்த ஆளுங்களோட உறவினர்களும் அதை சொல்ல வேணாமா?

என்னைப் பொறுத்தவரை, சக மனிதர்களைக் கொள்ளும் எவராக இருந்தாலும், அது ராஜபக்சேவா இருந்தாலும் சரி, வேற எந்த தீவிரவாதக் கூட்டமா இருந்தாலும் சரி, அவர்களை மன்னிப்பது கூட ஒரு வித கொலைதான்.

மன்னிப்பாம், விடுதலையாம், போங்கப்பா, புள்ள குட்டிங்கள படிக்க வைங்க.


Sunday, August 22, 2010

IAS - இந்திய அடிமை சர்வீஸ்?

உமா சங்கர், IAS (நேர்மையின் சின்னம்)
சென்ற புதன்கிழமை அன்றே இடப் பட வேண்டிய பதிவு இது: சில காரணங்களால் கொஞ்சம் தாமதமாக வெளியிடுகிறேன்.

பொதுவாகவே, நம்முடைய திரைப்படங்களின் மூலம் நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், ஆள்பவர்களின் எண்ணங்களுக்கேற்ப ஒரு அதிகாரி நடந்து கொண்டால் அவர் பந்தாடப் படுவதும், குண்டர்களால் தாக்கப் படுவதும்தான். ஆனால், ஒரு வித்தியாசம் என்னவென்றால், சினிமா க்ளைமாக்ஸில்  அதிகாரி மக்களால் போற்றப் பட்டு, குற்றவாளிகள் மாட்டிக் கொள்வார்கள். ஆனால், நிதரிசனம் வேறு மாதிரி இருக்கிறது.

சற்றேறக் குறைய பதின்மூன்று ஆண்டுக்கு முன்னால் ஒரு நேர்மையான அதிகாரியாகத் தெரிந்த உமா சங்கர், இன்று சஸ்பெண்டு செய்யப் பட்ட அதிகாரியாக இந்த அரசுக்கு தெரிகிறார் என்றால், அவர் செய்த தவறுதான் என்ன? ஒரு வேளை, அவர் தவறான சர்டிபிகேட் கொடுத்து வேலைக்கு சேர்ந்தார் என்றால், அதை கண்டுபிடிக்க இவ்வளவு வருடங்கள் ஆயிற்றா? அப்படி என்றால், ஒரு குற்றம் நிகழ்ந்து பல வருடங்கள் கழித்துதான் தெரிய வரும் என்றால் அது ஒரு உண்மையான நீதி நேர்மை நிறைந்த அரசாக எப்படி இயங்கும்.

தினகரன் அலுவலக எரிப்பில் மூன்று பேர் உயிரோடு கருகினார்களே, யார் காரணம் என்று யாருக்கும் தெரியாதா? தா. கிருட்டிணன் கொலையுண்டபோது "அரசியலில் இதெல்லாம் சாதாரணம்" என்று திருவாய் மலர்ந்தாரே, இன்றைய முதல்வர், அவருக்கு உண்மையான குற்றவாளிகளை தெரியாதா? இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் விட்ட (அல்லது விடச் சொல்லி கட்டாயப் படுத்தப்பட்ட) அதிகாரிகள் மீது இதே போல் நடவடிக்கை எடுப்பார்களோ?

"நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது சாக்கு" என்று உண்மையான அதிகாரிக்கு சோதனை தருவது ஒரு அரசுக்கு அழகல்ல. ஆனால், ஒன்று. இந்த அரசில் நேர்மை இருக்கும், நியாயம் கிடைக்கும் என்று யாராவது நம்பினால் அவர் கீழ்ப்பாக்கத்தில் சேர்க்கப் படவேண்டிய ஆள் என்பதுதான் நிதரிசனம்.

அதிகாரிகளுக்கும் ஒன்று புரிய வேண்டும். நீங்கள் செய்யும் எந்த செயலுக்கும் அது அரசுக்கு ஆதரவாக அமைந்தால் அது அரசின் சாதனை. அதுவே அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி கொடுத்தால், அது அதிகாரியின் கவனக் குறைவு, அந்த அதிகாரி தண்டிக்கப் படவேண்டியவர்.  இன்று ஒரு உமா சங்கர் தண்டிக்கப் படுகிறார்; இதைக் கண்டு கொள்ளாமல் விட்டால், நாளை நூறு உமா சங்கர்களுக்கு (நூறு நேர்மையான அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பதும் சந்தேகம்தான்!) இதே கதி ஏற்படும்.

கொதித்தெழுவோம், நம்மால் முடிந்தவரை உமா சங்கருக்கு ஆதரவாக எழுதுவோம்! இதை மக்களிடம் எடுத்து சென்று உண்மையான அரசாங்க ஊழியருக்கு கை கொடுப்போம்!